நினைவஞ்சலி

www.Ullam.net

நினைவஞ்சலி

  அன்பின் உருவமாய் தரணியில் வாழ்ந்தார்

அன்னை போல் என்றும் எமை நெஞ்சில் வைத்தார்

ஆறாவது பிள்ளையென நான் நோயோடு பிறக்க

அப்பாவோ எனைக்காக்க தான் நின்று தவிக்க 


எத்தனையோ வைத்தியர்கள் எனை வந்து பார்க்க

எவ்வளவோ  வேதனைகள்   அப்பாவை சேர

அத்தனையும் ஏற்று எனைக்காத்தார் அப்பா

அக்கறையாய் கண்ணை இமை காப்பது போல் காத்தார் 


உழைப்பாலும் வான்போல உயர்ந்து நின்றார்அப்பா

சேவை செய்வதிலும் முன் நிற்பார் என்றுமே அப்பா

தன் கையால் யாவருக்கும் கொடுத்தவர்தான் அப்பா

தற் பெருமை இல்லாத தங்கம் தான் அப்பா 


உன்னதமாய் இறைபணியை செய்து வாழ்வில் முடித்தார்

உயிர் இருக்கும் வரை தன்னால் இயன்றளவு செய்தார்

செல்வந்தனாய் இருந்தபோதும் எளிமையாக வாழ்ந்தார்

சென்ற இடம் எல்லாம் மதிப்போடு வாழ்ந்தார்


தொடக்கி வைத்தால் முடியும் வரை அயராது உழைப்பார்

தொண்டு செய்து  வாழ்பவனை எப்போதும் மதிப்பார்

உண்மை நேர்மை உள்ளவர்க்கு அன்பான அப்பா

பொய் களவு செய்பவரை வெறுப்பார் என் அப்பா


எந்த இடத்தை கேட்டாலும் உடன் சொல்வார் அப்பா

அனைவரையும் தெரிந்த ஒரு மனிதர்தான் அப்பா

தாய் தந்தை தெய்வமென போற்றியவர் அப்பா

தாய் தந்தை ஞாபகமாய் ஆலயமும் அமைத்தார்


அவரோடு இருந்த என் நினைவுகள் மறையாது

அவரோடு நான் கதைத்த ஞாபகங்கள் அழியாது

என் அப்பா போல் எவரும் எனக்காக கிடையாது

என் அப்பா செய்த தொண்டு எப்போதும் அழியாது


இப்போதும் ஆலயத்தில் இருப்பார் என் அப்பா

எப்போதும் துணையாக இருப்பார் என் அப்பா

பெரியார் இராசா கந்தசாமி

பெரியார் இராசா கந்தசாமி அவர்கள் 2003 ம் ஆண்டு தன் தாய் தந்தை நினைவாக மாதகல் நகரில் வீர ஆஞ்சநேயர் ஆலயத்தை தன் சொந்த நிதியிலேயே கட்டி முடித்தார். இந்த ஆலயம் கிட்டத்தட்ட 4 கோடி ருபா செலவில் கட்டப்பட்டது.

இந்த ஆலயத்தை கட்டும் போது சிலர் நேர்த்திக்காக நிதி உதவி வழங்கினார்கள். அவர்களுடைய பெயர்களும் வழங்கப்பட்ட நிதித்தொகையும் கீழே குறிப்பிடப்படும்.பெரியார் கந்தசாமி அவர்கள் இந்த கோவிலை கட்டும்போது பெரும் மனவேதனைகளுக்கு மத்தியில் பாணகவெட்டி அம்மன் துணையுடனும் ஆஞ்சநேயர் ஐயப்பன் துணையுடனும் கட்டி முடித்தார். கோவிலைக் கட்டி முடித்த பின்னும் இவ் ஆலய கும்பாபிசேகத்தை நடத்தவே அவர் பட்ட வேதனை அவர் துணைவியாருக்கும் அவருடைய இளையமகன் சேகருக்கும்தான் தெரியும்.கோவில் கட்டப்பட்ட காலத்தில் இருந்தே வெளிநாட்டில் இருந்தாலும் என் அப்பாவுடன் காலையும் மாலையும் தொலைபேசி கதைத்து அவருடைய சகல விடையங்களையும் பகிர்ந்து கொண்டு அவருக்கு ஓர் மன ஆறுதலாக இருந்தவன் நான் இளையமகன் சேகர்தான். இப்படி அவரால் கஸ்ரப்பட்டு கட்டப்பட்ட இவ் ஆலயத்தில்  கோயில் திருவிழாவும் கண்ணாரக்கண்டு தன் விருப்பப்படி மூன்று  தேர்களும் இழுத்து ஊர் மக்களும் வணங்கக்கண்டு பேரானந்தம் அடைந்தார் பெரியார் அவர்கள். அவருடைய இளைய மகனாக இருந்த நான் நேர்த்திக்காக கோவிலுக்கு அருகாமையில் என் அப்பாவிடம் சிறு நிலத்தை வேண்டினேன். அதற்கான  பணத்தை  என் அப்பா அம்மாவிடம் கொடுத்தேன். அந்த பணத்தை கொண்டு என் அப்பா கோவிலுக்கு குழாய்க் கிணறு ஒன்றை கட்டினார். நான் வேண்டிய அந்த நிலத்தில் தண்ணீர்ப் பந்தலாகவும் பிள்ளைகள் கல்வி கற்க ஒரு இடமாகவும் ஒரு மண்டபத்தை கட்டினேன். அதற்கு என் அப்பா பட்ட மன சந்தோசம் எனக்கும் அம்மாவுக்கும்தான் தெரியும். நான் நேர்த்திக்கு தண்ணீர்ப்பந்தல் கட்டிய வருடமே 14 வருடத்திற்கு பின் என் மகளுக்கு துணையாக ஆண் மகன் ஆஞ்சநேயர் அருளாள் பிறந்தான்.

என் அப்பா பெரும் மகிழ்ச்சி பட்ட ஒவ்வொரு நாளும் என் வாழ்நாளில் மறக்க முடியாத நினைவுகள்.

ஒவ்வொரு வருட திருவிழாவின் 8 ம் திருவிழா நான் செய்யும் போது அப்பாவிற்கு பெரிய சந்தோசம். இப்படி நான் அப்பா வாழ்ந்த காலத்தில் அவரை ஒவ்வொரு

நாளும் சந்தோசப்படுத்திதான் வைத்திருந்தேன். பெரியார் கந்தசாமி அவர்கள் தான் கட்டிய கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் ஆஞ்சநேயர் அருள் கிடைக்கப்பெற்று மனஆறுதல் அடையவேண்டும் அத்துடன் கோவிலுக்கு வந்து செல்பவர்கள் வயிறு ஆற சாப்பிட்டுச் செல்லவேண்டும் என்றே விரும்பினார்.அவர் விரும்பியபடியே  நான் வெள்ளி, சனி கிழமைகளில் அன்னதானம் கொடுத்தேன். இப்போது அவர் இல்லாத காலத்திலும்  செவ்வாய்  வெள்ளி  தினங்களில் அன்னதானம் வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றது. அவருக்கு மனதில் நிறைய ஆசைகள் இந்த கோவிலை எப்படி இன்னும் பெரிய நிலைக்கு கொண்டு வருவது என்று. அவர் இப்போதல்ல பிறந்த காலத்தில் இருந்தே கடவுள் பக்தி நிறைந்த குடும்பத்தில் கடவுளின் அருளாள் கடவுளுக்கு சேவை செய்ய என்றே பிறந்த குழந்தையாகும்.

அதனால்தான் சங்கானை பிள்ளையார் கோவில்,மாதகலில் உள்ள பல கோவிகளில் அன்னதானம் தண்ணீர்ப்பந்தல் என எல்லாவற்றையும் ஆரம்பித்து வைத்ததே  பெரியார் இராசா கந்தசாமி அவர்கள்தான். மாதகல் பாணகவெட்டி அம்மன் ஆலயத்தின் பதினாறு பரிவார மூர்த்திகளையும் அமைத்துக் கொடுத்து  அன்னதான மண்டபமும் கட்டி கொடுத்தார் . இலங்கை ,இந்தியாவின் சகல ஆலயங்களுக்கும் சென்று வழிபட்ட பெரியார் அவர்கள் கதிர்காமக்கந்தனை அடிக்கடி சென்று தரிசனம் செய்து வருவார். பெரியார் கோவிலுக்கு செல்லும்போது தன் குடும்பத்துடன் ஊர் மக்களையும் தன் லொறியில் ஏற்றிச் செல்வார்.

தனது இளமை வயதிலேயே கொழும்பில் பெரிய வர்த்த கடையினை வேண்டி பல செல்வங்களை சேகரித்து பெரிய வியாபாரியாக யாவருக்கும் தெரியும் வண்ணம் வாழ்ந்து நின்றார். வியாபாரத்தில் அவரின் நேர்மையே அவர் உயர்ந்து வந்தமைக்கு மிகப் பெரிய காரணமாக அமைந்தது. இரக்கம், கொடுக்கும் குணம், விடா முயற்ச்சி, மனத்திடம் என பல நற் குணங்களை தன் அகத்தே கொண்ட பெரியார் அவர்கள் எந்த வித கெட்ட பழக்கங்களும் இல்லாத ஒரு மனிதராக வாழ்ந்து வந்தார்.

 இளைமைக்காலத்தில் பெரிய விவசாயியாக திகழ்ந்த பெரியார் கந்தசாமி அவர்கள் எராளமான விவசாய நிலங்களுக்கு சொந்தக்காரராக இருந்தார்.

தான் கஸ்ரப்பட்டு கட்டிய கோவிலுக்கு தான் விரும்பியவற்றை செய்த பெரியார் அவர்கள் ஒரு சிலவற்றை மட்டும் அவரால் செய்ய முடியவில்லை. அதாவது

1. கோபுரம்

2. தேர்முட்டி

3. தண்ணீர்ப்பந்தல்

4.தேர் செல்ல அழகான பாதை

5. தீர்தக்கேணி

6.பூந்தோட்டம்

7. தேர்

தண்ணீர்ப்பந்தல் அவர் ஆசைப்படி நான் கட்டினேன். பூந்தோட்டமும் கடைசி காலத்தில் அவர் உருவாக்கினார்.அவர் இறப்பதற்கு முதல்நாள்தான் பூந்தோட்டத்தை முற்றாக முடித்தார்.

கோபுரம் கட்டுவதற்கு நிதிப் பிரச்சனை அவருக்கு இருந்ததில்லை. சில பேர் குடும்பத்துக்குள் தடையாக இருந்தபடியால் அவரால் செய்யமுடியவில்லை. அவர் பெரிய செல்வந்தராக இருந்தாலும் பார்க்கும் போது மிக எளிமையாகவே வாழ்ந்தார். அவருக்கு கடைசி காலத்தில் இருந்த மிகப் பெரிய ஆசை கோபுரத்தை கட்டி பார்க்கவேண்டும் என்பதுதான். அதற்கான நிதியும் இருந்தது.  இப்படி அவர் கோபுரம் கட்டும் நாளை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்.

2014ம் ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிய ஐயப்பன் பூசையை சிறப்பாக செய்யவேண்டும் என்று முடிவெடுத்து ஒவ்வொரு நாளும் காலையில் இளநீர் பால் அபிசேகத்துடன் சிறு பிரசாதம் வழங்கப்பட்டு மாலையும் பூசை நடைபெற்று ஐயப்பன் பாடல் பாடி பிரசாதம் வழங்கப்பட்டது. காலையில் பெரியார் கந்தசாமி அவர்களின் பூசையாக இருந்தது. மாலையில் அவரது இளைய மகன் சேகரின் பூசையாக இருந்தது.இடையில் வேறு சில பேரும் பூசை செய்தார்கள். ஐயப்பன் பூசை கடைசி நாள் தைப்பொங்கல் அன்று  பெரியார் அவர்கள் தன் துணைவியாருடன் இணைந்து குழைசோறு அவித்து எல்லோருக்கும் கொடுத்து நான்கு இடங்களில் தைப்பொங்கல் பொங்கி தன் கையால் எல்லோருக்கும் மன மகிழ அன்னதானம் கொடுத்து தன் தோட்டத்தில் வெற்றிலையும் நடக்கண்டு மன மகிழ்வுடன் வீடு சென்றார்.

மறு நாள் காலை பெரியார் இராசா கந்தசாமி அவர்கள் மண்ணுலகை விட்டு இறைபதம் சேர்ந்தார். அவர் இறைவனுக்கு செய்த தொண்டும் அவரது நல்ல மனப்பாண்மையும்  இணைந்ததாலே கொடுத்த கை முதல்நாள் கொடுக்க வைத்து தன்னகத்தே எடுத்துக்கொண்டார் இறைவன். எல்லோருக்கும் இப்படி இறைபதம் கிடைப்பது அரிது . என் அப்பா பெரியார் இராசா கந்தசாமி அவர்கள் செய்தது பெரிய திருப்பணி. அவர் விட்டுச் சென்ற சிறிய திருப்பணியை இந்த  ஒரு வருட நினைவு தினத்திற்கு முன் நிறைவேற்றுவதே பிள்ளைகளின் கடமையாகும்.

        பாசமுள்ள மகன்

      சேகர் கந்தசாமி