மார்கழியில் ஆன்மிகமும், ஆரோக்கியமும்

மார்கழியில் ஆன்மிகமும், ஆரோக்கியமும்!

மார்கழி மாதம் ஆன்மிக மாதம். “மாதங்களில் நான் மார்கழியாக இருக்கின்றேன்” என்று கிருஷ்ண பரமாத்மா சொல்லி இருக்கிறார். மார்கழி மாதத்தில் நோன்பு இருக்கும் வழக்கம் சங்க காலம் முதலே தமிழரிடம் இருந்து வந்திருக்கிறது என்பதனை  பரிபாடல் முதலான சங்க இலக்கியங்கள் சொல்கின்றன.

மார்கழி மாதத்தில் பெண்கள் நோன்பு இருப்பதால் அந்த நோன்புக்கு மார்கழி நோன்பு என்ற பெயரும் கன்னிப்பெண்கள் ’பாவை’, அதாவது பொம்மை (உருவம்) அமைத்து நோன்பு இருப்பதால் அதற்கு ’பாவை நோன்பு’ என்ற பெயரும் உண்டு.   இந்த நோன்பில் இரண்டு நோக்கங்கள் உண்டு. ஒன்று நல்ல கணவன் வேண்டும் என்பது, இரண்டு, உலகில் நல்ல மழை பெய்ய வேண்டும் என்பது. இப்படி சுயநல நோக்கமும், பொதுநல நோக்கமும் கொண்டு பாவை நோன்பு நோற்கப்படுகிறது. 

சைவ சமயத்தவர்கள் மார்கழிமாதத்தில் வரும் திருவாதிரை நாளிற்கு ஒன்பது நாட்கள் முதல் "நோன்பை" ஆரம்பித்து பத்தாவதுநாள் திருவாதிரை அன்று  நிறைவு செய்வார்கள். ஆனால் வைணவ சமயத்தவர்கள் மார்கழி மாதம் முழுவதும் நோன்பு இருந்து வணங்குவார்கள்.

ஆண்டாள் அருளிய திருப்பாவையும் மணிவாசகப் பெருமான் பாடியருளிய திருவெம்பாவையும் மார்கழி நோன்பை அடிப்படையாகக் கொண்டவை. ஆண்டாள் இயற்றிய பாவைப்பாட்டாகிய    திருப்பாவை முப்பது பாடல்களைக் கொண்டது.  திருப்பாவை ''மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்' என்று தொடங்குகிறது. மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது இயற்றிய  திருவெம்பாவை இருபது பாடல்களைக்கொண்டது. திருவெம்பாவை  “மார்கழி நீர் ஆடேலோர் எம்பாவாய்''  என்று முடிகிறது. திருப்பாவையின் முப்பது பாடல்களையும், திருவெம்பாவையின் இருபது பாடல்களுடன் 'திருப்பள்ளியெழுச்சி' யிலுள்ள பத்து பாடல்களுடன் சேர்த்து அந்த முப்பது பாடல்களையும் மார்கழி மாத முப்பது நாட்களிலும் பக்தி ரசம் பொங்க வைணவ, சைவ பக்தர்கள் பாடி மகிழ்கிறார்கள்.

மார்கழி மாதத்தில் அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பாகவே எழுந்து வாசல் தெளித்துக் கோலமிட்டு ஆற்றங்கரைக்குச் சென்று நீராடி ஆற்று மணலில் பாவை செய்து அதற்குப் பூஜை செய்வதை அக்காலத்தில் கன்னிப்பெண்கள்  வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். மனதில் ஒரு லட்சிய புருஷனை வரித்து அப்படிப்பட்டவனே தனக்கு கணவனாக வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டால் அப்படியே கணவன் அமைவான் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது.  அவ்வாறு இளம் பெண்கள் நீராடும் போது பாவையை நோக்கி ‘பாவாய்’ என அழைத்துப் பாடுவதே பாவைப் பாட்டாகும்.   நோன்பின் போது உண்ணும் உணவிலும், அணிகலன்கள் அணிவதிலும் நிறைய கட்டுப்பாடு வைத்திருந்தார்கள். ஆண்டாளே அறிவிக்கிறாள். '' பாலுண்ணோம் நெய்யுண்ணோம் கோல அணிகலெல்லாம் பூணோம்''. திருமணமான பெண்கள் கணவனின் நலனிற்காகவும், இருவரும் இடைபிரியாதிருக்கவும் வேண்டிக் கொள்வார்கள்.

மார்கழி மாதத்தில் சூரியன் பூராடம் நட்சத்திரத்தில் பயணிக்கும் காலத்தை  "கர்போட்டம்" என்பார்கள். அடுத்த வருடம் வரும் மழைக் காலம்  அதற்கு முன்னாலேயே மார்கழி மாதத்தில் சூல் கொள்கிறது, அது மழைக்குக் கர்ப்பம் தரிக்கும் காலம் என்று அக்காலத்தில் நம்பினார்கள். அந்த சமயத்தில் வாயு மண்டலத்தில் தென்படும் மேகக்கூட்டங்களின் அமைப்பு, காற்றின் தன்மை, பனி, வைகறையில் காணப்படும் வானத்தின் நிறம் ஆகியவற்றைப் பொருத்து வரும் ஆண்டின் மழைக்காலம் அமையும் என்ற கணிப்பு அவர்களூக்கு இருந்தது.

இதை விளக்கும் பழந்தமிழ் பாடல் ஒன்று உண்டு.: 

“தீயபூ ராடம் வெய்யோன் சேர்ந்திடு நாளில் வட்டம்    தூயமந் தாரம்

தோன்றில் சுடரவன் ஆதி ரைக்கே       

பாயுநாள் தொட்டு முன்பின் ஒருநாட்கும் பதினாலாக     காயும்வேற்

கண்ணாய் சொல்லும் கார்மழை கர்ப்பம் தானே”

 மார்கழி மாதம் தனுசுராசியில் சூரியன் நகரும் பதிநான்கு நாள்களில் காணப்படும் தட்பவெப்ப நிலையைப் பொருத்து எதிர் வரும் ஆண்டின் குறிப்பிட்ட மாதங்களில் மழைபொழிவு இருக்கும் என்பதே இப் பாடலின் கருத்து.

அதனால் தான் நன்றாக மழை பெய்ய வேண்டும் என்று மார்கழி நோன்பின் போதே, வேண்டிக் கொள்ளும் வழக்கம் அன்று இருந்தது. பாவை நோன்புக்கும் மழைக்கும்  உள்ள தொடர்பையும்  ஆண்டாளும் தன் பாடலில் வெளிப்படுத்தி உள்ளாள்.  'நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராட்டினால், தீங்கின்றி  நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்யும்" என்று கூறியுள்ளாள். திருவெம்பாவை, திருப்பாவை இரண்டிலுமே ‘மழை பொழிய வேண்டும்’ என்னும் வேண்டுதல் உண்டு.

மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்குவது மிக விசேஷமாகக் கருதப்படுகிறது. சிறு பிள்ளைகள் கூட சோம்பல் இல்லாமல் வரவேண்டும் என்று உற்சாகப்படுத்த கோயில்களில் பொங்கல், சுண்டல் எல்லாம் தருவதுண்டு. மார்கழி மாத வழிபாட்டிற்கு மட்டும் ஏன் இந்த தனிச்சிறப்பு என்பதற்கு அறிவியல் காரணமும் உண்டு.

மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் காற்று மண்டலத்தில் ஓசோன் மிக அதிகமாகக் கிடைக்கிறது. இந்த ஓசோன் படலம் தான் சூரியனிடம் இருந்து வருகின்ற Ultra Violet Rays என்று சொல்லப்படுகிற  கேடு விளைவிக்கின்ற புற ஊதாக்கதிர்களை உறிஞ்சி  உயிரினங்கள் அழியாமல் பாதுகாக்கிறது. மார்கழி மாத அதிகாலைகளில் சூரியனின் உதயத்திற்கு முன்பாக அதிகமாகக் கிடைக்கும் இந்த ஓசோனுக்கு வீரியம் அதிகம். இதைச் சுவாசிப்பதால் நம் உடலில் உள்ள இரத்தம் விரைவாகச் சுத்தம் அடைகிறது. நரம்பு மண்டலத்தைத் துடிப்பாக வைத்துக் கொள்ள முடிகிறது. அதனால் நினைவாற்றல் பெருகுகிறது. ஓசோன் நிறைந்த  மார்கழி மாதக் காற்று தோலுக்கும், வெள்ளை சிகப்பு உயிர் அணுக்களுக்கும், புற்று நோய் தீர்வுக்கும் கூட மிகவும் உதவியாக இருப்பதாக்க் கூறுகிறார்கள்.

இவ்வாறு நன்மை பயக்கும் ஓசோனைச் சுவாசிப்பதற்கு நாம் வெளியில் செல்ல வேண்டும். இவ்வளவு அதிகாலைக் குளிரில் வெறுமனே மக்களை வெளியே சென்று ஓசோன் நிறைந்த காற்றைச் சுவாசிக்கச் சொன்னால் பலர் கேட்க மாட்டார்கள் என்று அதில் பக்தியை சேர்த்து நம் முன்னோர் கட்டாயமாக்கி விட்டார்கள். ஓசோன் வாயு அதிகமாகக் கிடைக்கும் அந்த அதிகாலை நேரத்தை வழிபாட்டு நேரமாக்கி விட்டார்கள்.

அதிகாலையில் விழித்தெழுந்து வாசலில் நீர் தெளித்து சாணமிட்டு மொழுகி கோலமிட்டு, ஆற்றங்கரைக்குச் சென்று நீராடுவது, கோவிலுக்குச் செல்வது, பஜனை செய்வது  போன்ற செயல்களில் உடல் ரீதியான  நல்ல மாற்றங்களும் நிகழ்கின்றன. அதோடு ஆன்மிக வளர்ச்சியும் ஏற்படுகிறது.

காலப் போக்கில் ’பாவை நோன்பு முறை’ காலாவதியாகி விட்டது. ஆண்டாளின் திருப்பாவையும், மாணிக்க வாசகரின் திருவெம்பாவையும் தான் மார்கழி வைகறையில் நம்மைத் தெய்வ சிந்தனையில் ஈடுபட வைக்கின்றன. மார்கழி மாதம் விடியற்காலையில் கோயில் செல்வது, பஜனைசெய்வது மட்டும் பலரால் இன்னும் பின்பற்றப்படுகிறது.  தற்போது ஐயப்ப பக்தர்களும் மார்கழி மாத வழிபாட்டில் பெருமளவு ஈடுபடுகின்றனர். இப்படி ஆன்மிகத்தையும், ஆரோக்கியத்தையும் வளர்க்கும் மார்கழி மாத வழிபாட்டில் நாமும் ஈடுபட்டு இரட்டைப் பலனை அடைவோமே!www.Ullam.net

கோயில்கள்